கொங்கு நாட்டுப் பழமொழிகள் என்ற ஒரு சிறந்த தொகுப்பு நூல் உள்ளது. இது திருமதி ஜெயா மீனாக்ஷிசுந்தரம் என்கிற அம்மையாரால் விரிவான களஆய்விற்குப் பின் தொகுக்கப் பட்டது. இதில் தமிழ்ப் பழமொழிகள் முதலில் தமிழில் தரப்படுகின்றன. பின்னர் அவையே ஆங்கிலத்தில் எழுதப்படுகின்றன. அதற்குக் கீழ் ஆங்கில மொழிபெயர்ப்பு தரப்படுக்திறது. நுணுக்கமான விவரங்கள் தேவைப்படும் போது தரப்படுகின்றன. இந்நூல் என்சிபிஎச் பதிப்பகத்தாரிடம் கிடைக்கும். (சென்னை அண்ணா சாலை, எல் ஐ சி அருகில்). பழமொழிகளில் பல பொருள்கள் இருக்கும். ஆனால் இரட்டை அருத்தம் இருக்கும் என்று சொல்ல முடியாது. முதல் பழமொழிக்குப் பொருள் எந்த வேலையைச் செய்வதற்கும் ஆளை நம்பினால் ஆதரவு அற்ற ஒரு நிலை. நடந்தாலும் நடக்கும். நடக்கா விட்டாலும் நடக்காது. மகனை நம்பினால் தாமதம் ஆகலாம். இதே பொருளைத் தரும் இன்னொரு பழமொழி ஆள் போனால் அதமம், மகன் போனால் மத்திமம், தான் போவது உத்தமம். 2. சோத்துக்கு இல்லாத பார்ப்பான், சொன்னபடி கேட்பான் என்பது திருந்திய வடிவம். சோத்துக்கு இருந்தா, பார்ப்பான் சொன்னபடி கேட்பான் என்றாலும் அதே பொருள்தான். நமக்கு ஒன்று தேவைப்படுமானால் நாம் அதற்கு வேண்டிய செயல்களைச் செய்வோம் அல்லவா? சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் கூட, அவர்களுக்குத் தேவையானால், வேண்டியதைச் செய்வார்கள் என்பது பொருள். அட்மிஷன் தேவைப்படும்போது யார் யாரை எல்லாம் நாம் போய்ப் பார்க்கிறோம்? ௩. வெண்ணெய் திரண்டு வரும்போது, தாழி உடைந்தது என்ற பழமொழிக்கு எல்லாருக்கும் பொருள் தெரியும். வேலை நிறைவு அடையும் சமயத்தில் எதிர் பாராது பெரிய இடையூறு ஏற்பட்டு வேலைக்குக் கேடு வந்தது. ௪. நடக்க மாட்டாதவன், சித்தப்பன் வீட்டுல பெண் கேட்டமாதிரி என்றால், பாடு பட இயலாதவன், செயல் முறைகளில் சமரசம் செய்துகொள்வது போல என்பதாகும். அமாவாசைக்குக் காலையில் தாமதமாகச் சாப்பாடு சாப்பிடுவதற்குஇயலாது என்றால், காலைச் சிற்றுண்டி கொள்வது போல். ௫. இது புரியாத பழமொழியாக உள்ளது. ஏதோ ஒரு மூட்டையைப் பார்த்து பெரிய பொருள் வந்துவிட்டதாக நினைத்து மிக் மகிழ்ந்துவிட்டு, அதைப் பிரித்துப் பார்த்தபோது அது ஒரு வெறும் வேப்பிலை என்று அறிந்து ஏமாற்றம் அடைகிறான். தோற்றத்தைப் பார்த்து ஏமாற வேண்டாம் என்பதே இப்பழமொழியின் பொருள் என்று கொள்ளலாம். மீதிப் பழமொழிகளைப் பற்றி இன்னொரு நாள் பார்க்கலாம். சூலூர் தெய் சேஷகிரி
Wednesday, April 9, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கும் உங்கள் சுற்றத்தாருக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
Dear Uncle, Thanks for the explanations. Can you please give us the explanations for the rest of the proverbs too?
- Kuzhali
Post a Comment