Tuesday, August 19, 2008

day by day, day by day, வாழ்க்கைப் பயணம் day by day…

முன்னொரு காலத்தில், ரயில், விமானம், செல்போன் எல்லாம் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் விறகு வெட்டிப் பிழைக்கும் ஒருவர் காட்டின் ஓரமாக வாழ்ந்து வந்தார். அவர் ஏதோ ஒரு முக்கிய வேலையாக காட்டின் மறுபக்கத்தில் இருந்த ஒரு ஊருக்கு உடனே போக வேண்டியிருந்தது. காலையில் காட்டின் வழியாக தன் பயணத்தைத் தொடங்கினார். நாள் முழுவதும் பயணம் செய்த பிறகு சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் காட்டின் மத்தியப்பகுதியை வந்தடைந்தார். காடுகளையெல்லாம் அழித்து கான்கிரீட் மரங்களை மொத்தமாக வளர்க்கும் இந்தக் காலம் போல் இல்லாமல் உயரமான அடர்ந்த பச்சை மரங்களைக் கொண்ட காடாக அது இருந்ததால் மாலை நேரமானதும் இருள் வேகமாக சூழ ஆரம்பித்தது. நம் நண்பரோ தான் செல்ல வேண்டிய இடத்தை அடுத்த நாள் காலையிலேயே சென்றடைய வேண்டும். இரவு முழுவதும் பயணம் செய்து காட்டைக் கடந்தால் தான் அது முடியும். கையில் விளக்கு ஏதும் வேறு எடுத்து வரவில்லை. என்ன செய்வது? அப்போது சிறிது தொலைவில் மரங்களின் மத்தியில் ஒரு குடிசை ஒன்று இருப்பது போல் தெரிந்தது. ஏதாவது உதவி கிடைக்கும் என்று அந்த குடிசையை நோக்கி நடந்தார் நம் நண்பர். அந்தக் குடிசை ஒரு முனிவரின் குடில். குடிலுக்குள் முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்தவுடன் ‘முனிவர்கள் மாய வித்தைகள் பல செய்ய வல்லவர்கள்’ என்று கேள்விப்பட்டிருந்தது நம் நண்பருக்கு நினைவிற்கு வந்தது. ஒரு விசித்திர யோசனையும் தோன்றியது. முனிவரிடன் சென்று தனக்கு ஒரு வரம் வேண்டும் என கேட்டுக்கொண்டார் நம் நண்பர். என்ன வரம் வேண்டும் என்று முனிவர் கேட்டவுடன், தான் போகும் பாதையெல்லாம் ஒளிமயமாக்க வேண்டும் என கேட்டார். அதாவது, முனிவர் மாய வித்தைகளை பயன்படுத்தி தெரு விளக்குகள் போல் எதையாவது பாதையெங்கும் உருவாக்கி ஒளிமயமாக்குவார் என எதிர்பார்த்தார் நம் நண்பர். ஆனால் முனிவரோ, ஒரு லாந்தர் விளக்கை அவரிடம் கொடுத்து எடுத்துச் செல்லச் சொன்னார். நம் நண்பருக்கு ஏமாற்றம். ஏதோ, மாய மந்திரம் செய்து தன் பாதையை ஒளிமயமாக்குவார் என்று பார்த்தால் இந்த விளக்கைக் கொடுக்கிறாரே, இது பத்து அடிக்கு தானே வெளிச்சம் கொடுக்கும் என முனிவரிடம் கேட்டே விட்டார். முனிவர், “அப்பனே, நான் மாயம் செய்து உன் பாதையை ஒளிமயமாக்கக முடியும், ஆனால் அதனால் உனக்கு ஒன்றும் பயனில்லை. எப்படியும் உன்னால் அடுத்த பத்து அடியைத்தான் பார்க்க முடியும். இந்த விளக்கைப் பயன்படுத்தி உன் முன் உள்ள பத்து அடிகளைக் கடந்தால் அடுத்த பத்து அடிகளுக்கு உனக்கு வெளிச்சம் கிடைக்கும். அப்படியே நீ காட்டைக் கடந்து நீ செல்ல வேண்டிய இடத்திற்கு நாளை காலை தவறாமல் சென்றடைவாய்” என்றார். நம்மில் பலரும் இது போலத்தான். எதிர்காலத்தைப் பற்றியே சிந்தனை. நம் முன் உள்ள நிகழ்காலத்தை விட்டு விட்டு அறியாத எதிர்காலத்திற்கே நம் சிந்தனைகளை செலவு செய்து திட்டமிட்டு வருகிறோம், கடவுளிடமும் சென்று கும்பிட்டு நம் எதிர்காலத்தை ‘insure’ செய்ய முயல்கிறோம். திட்டங்கள் தேவை தான், ஒரு தொலைநோக்குப் பார்வை, வாழ்க்கைக்கென ஒரு லட்சியம் அவசியம் தேவை தான். ஆனால் இன்றைக்கு செய்ய வேண்டிய காரியத்தை சரியாகச் செய்தால் தான் ஒரு நாள் நம் லட்சியத்தை அடைய நமக்கு வாய்ப்புள்ளது. மலையின் உச்சியை அடைய வேண்டுமானால் ஒவ்வொரு படியிலும் கவனத்தைச் செலுத்தி அடி மேல் அடி வைத்து தான் அடைய முடியும். அதை விட்டுவிட்டு பாதி வழியில் சென்றுகொண்டிருக்கும் போது நம் கண் முன் உள்ள படியில் கவனம் செலுத்தாமல் மலை உச்சியை கண்டு கொண்டே அடி எடுத்து வைத்தால் சறுக்கி விழுந்து மலையின் அடிவாரத்தை அடை வேண்டியது தான். பிறகு பயணத்தை மறுபடியும் முதலிலிருந்து தொடங்க வேண்டியது தான். நம் கண் முன் உள்ளதை, நம்மால் அறிய முடிவதை மறந்து விட்டு காணாத, அறியாத ஒன்றைப் பற்றி கற்பனை செய்து கனவு கண்டுகொண்டோ, கவலைப்பட்டுக் கொண்டோ இருந்தால் எங்கும் செல்ல முடியாது. இன்று நாம் செய்ய வேண்டியதில் கவனம் செலுத்தி சரியாகச் செய்து ஒவ்வொரு நாளும் இவ்வாறே அன்றன்று செய்ய வேண்டிவற்றை அன்றன்று சிறப்பாகச் செய்து day by day வாழ்க்கைப் பயணத்தை அனுபவித்தால் தான் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். (இன்று காலை பொதிகைத் தொலைக்காட்சியில் பரமஹம்ஸ நித்யானந்தரின் சொற்பொழிவைக் கேட்க நேர்ந்தது. அதில் அவர் சொன்ன கருத்துகளின் தூண்டுதலில் எழுதியது இது.)

No comments: