இங்கு முருகனுக்கு ஒரு காலத்தில் ஆட்டு ரத்தம் கலந்த அரிசிச் சோற்றைப் படைத்த வேடுவர்கள் உண்டு! சொல்பவர் நக்கீரர்!
கொழுவிடைக் குருதி விரைஇய தூவெள்ளரிசி சில்பலிச் செய்து என்கிறார்.*
மற்ற படைவீடுகளைப் போல பிரம்மாண்டமான ஆலயம் இங்கு கிடையாது! முன்பு கூட வேல் வழிபாடு மட்டுமே இருந்துள்ளது. அண்மைக் காலங்களில் தான் தனியான ஆலயமும், முருகனின் சிலை வைத்து வழிபாடுகளும் தோன்றியுள்ளன!*
முற்காலத்தில், வேட்டுவர்கள், குறிஞ்சி நில மக்கள் எப்படி வழிபட்டு வந்தனரோ, அப்படியே தான் பல வழிபாடுகள் இன்றும் உள்ளன; வேட்டுவர்கள் தெய்வமான ராக்காயி அம்மனும் மலை மேல் உண்டு!*
நாகரீக மாற்றங்களால் அதிகம் அசைந்து கொடுக்காது, பண்டைத் தமிழ் மலையாகவே பழமுதிர் சோலைமலை இருந்து வருகிறது போலும்!*
நூபுர கங்கை என்னும் சிலம்பாறு, காட்டாறாகப் பாயும் மலை. இங்கு மாதவி மண்டபத்தில் அமர்ந்து, இளங்கோ தம் காப்பியத்தை எழுதினார் என்று சொல்வாரும் உண்டு!*
ஒளவைக்கு நாவற் பழம் காட்டி, "பாட்டி, பழம் சுடுகிறதா?" என்று கேட்ட இடம் இதுவே!*
- ஆழ்வார்கள் சோலைமலையின் இயற்கை அழகை மனம் பறிகொடுத்து வர்ணித்துள்ளார்கள். ஆண்டாளின் கல்யாண வேண்டுதலை நிறைவேற்றிய இறைவனும் சோலைமலை அழகரே! மாலிருஞ்சோலை பாடற் குறிப்புகள் பரிபாடல் முதலான சங்க இலக்கியங்களிலும் வருகின்றன! கீழே ஒரு அழகன் - முல்லை அழகர்!இப்படி இரு அழகன்களும் ஒரு சேர இருப்பதால், சோலைமலை முழுதும் அழகு ததும்பி வழிவதில் வியப்பென்ன?*
- அகரமும் ஆகி அதிபனும் ஆகி, சீர் சிறக்கும் மேனி பசேல் பசேல் = போன்ற புகழ்மிக்க திருப்புகழ்கள், பழமுதிர்சோலை முருகனின் மீதே!
- இழுமென இழிதரும் அருவிப், பழமுதிர் சோலை மலைகிழ வோனே!திரு மலிவான பழமுதிர் சோலை, மலை மிசை மேவும் பெருமாளே!இரு நிலம் மீதில், எளியனும் வாழ, எனது முன் ஓடி வர வேணும்!முருகா!

1 comment:
படங்களுடன் பக்தி கட்டுரை சிறப்பாக உள்ளது. நாமே நேரில் சென்று வரும் திருப்தி ஏற்படுகிறது. தொடரட்டும் இப்பணி !
Post a Comment